×

ஆன்மிகத்திற்கும் ஜோதிடத்திற்கும் சம்பந்தம் உண்டா?

ஆன்மிகத்திற்கும் ஜோதிடத்திற்கும் சம்பந்தம் உண்டா?- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.நிச்சயம் சம்பந்தம் உண்டு. இந்த உலகில் நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்விற்கும் ஆன்மிகத்திற்கும் நிச்சயமாக சம்பந்தம் உண்டு. ஆன்மிகத்தையும் அறிவியலையும் இணைக்கும் பாலம்தான் ஜோதிடம். இன்றைக்கு அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படுகின்ற உண்மைகள் எல்லாம் ஆன்மிக ரீதியாக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சொல்லப்பட்டவைதான். இந்த உண்மைகள் அனைத்தினையும் நமது வேதாங்க ஜோதிடத்தில் காண முடியும். உதாரணத்திற்கு கிரஹணம் என்ற நிகழ்வினையே நாம் எடுத்துக் கொள்ளலாம்.இன்றைக்கு அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்த பிறகு இந்த நேரத்தில் கிரஹணம் ஆரம்பித்து இந்த நேரத்தில் முடிகிறது என்று வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் இதையே அறிவியல் பற்றி அறிந்திராத பஞ்சாங்க கணிதர்கள் துல்லியமாக ஜோதிடத்தின் வாயிலாக கணித்து விடுகிறார்கள். இது எப்படி சாத்தியமாகிறது? நமது பாரத தேசத்தில் வாழ்ந்த மஹரிஷிகள் எல்லோருமே ஆன்மிக விஞ்ஞானிகளே. பூமியில் வசித்தவாறே தங்கள் புறக்கண்ணால் வானத்தை நோக்கியும், தங்கள் தவ வலிமையின் மூலமாக கண்களை மூடிக்கொண்டு அகக்கண்ணால் இயற்கையின் ரகசியத்தை அறிந்து அதனை உபநிஷத்துக்கள் மூலமாக இந்த உலகிற்கு எடுத்துரைத்தவர்கள் நம் மஹரிஷிகள். உலகளாவிய ஜோதிட அறிவியலுக்கு அடிப்படையே நமது வேதாங்க ஜோதிடம்தான். ஆக, ஆன்மிகத்திற்கும் ஜோதிடத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் தற்காலத்தில் ஜோதிடத்தின் பெயரால் ஆன்மிக ரீதியாக சொல்லப்படுகின்ற பரிகாரங்கள் பெரும்பாலும் ஏற்புடையதாக இல்லை. ஜோதிடம் என்ற அறிவியல் எப்போதும் பரிகாரங்களைச் சொல்வதில்லை. ஜோதிடம் என்பது வேறு, பரிகாரம் என்பது வேறு என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஜோதிடம் என்பது முழுக்க முழுக்க கணிதம் சார்ந்த ஒரு அறிவியலே. ஒருவரின் ஜாதகத்தைக் கொண்டு அவருடைய வாழ்நாளில் இதுபோன்ற இன்ப துன்பங்கள் வந்து சேரும் என்பதை ஒரு ஜோதிடரால் துல்லியமாகக் கணிக்க இயலும். இன்பத்தை அனுபவிக்க துடிக்கும் நாம், நமது ஊழ்வினைப் பயனால் உண்டாகும் துன்பத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அதிலிருந்து தப்பித்துக்கொள்ள பரிகாரம் என்ற ஒன்றை தேடிச்செல்வது மனித இயல்பு ஆகிவிட்டது.ஒரு மனிதனுக்கு தன் வாழ்நாளில் உண்டாகும் பலன்களைப் பற்றி மட்டுமே ஜோதிடம் தெளிவாக எடுத்துரைக்கும். மாறாக ஜோதிட நூல்களில் பரிகாரம் என்ற வார்த்தை எங்கும் காணப்படவில்லை. பரிகாரம் மற்றும் பிராயச்சித்தம் என்பது ஆன்மிகம் தொடர்பான விஷயங்கள். ஜோதிட ரீதியாக இல்லாமல் ஒரு மனிதனுக்கு உண்டாகும் பிரச்னைகளின் அடிப்படையில் பரிகாரங்கள் என்பது சொல்லப்பட்டிருக்கின்றன. அதனை கற்றுணர்ந்த பெரியோர்கள் மட்டுமே பரிகாரம் சொல்ல இயலும்.ஜோதிடர்கள் என்பவர்கள் உங்கள் ஜாதகத்தில் எந்த மாதிரியான பிரச்னைகள் வரும் என்பதை எளிதாகக் கண்டறிந்து சொல்லக் கூடியவர்கள். அதேநேரத்தில் ஜோதிடத்தை மற்றுமே கற்றவர்களால் அதற்கான பரிகாரம் சொல்ல இயலாது. புரியும்படியாக சொல்ல வேண்டும் என்றால் ஜோதிடர்கள் என்பவர்கள் லேப் டெக்னீஷியன் என்று வைத்துக் கொள்ளலாம். உங்களுடைய உடம்பில் இருந்து ரத்தத்தினை சேகரித்து அதனை பரிசோதித்து உங்களுக்கு இன்ன மாதிரியான வியாதி இருக்கிறது என்பதை மட்டுமே அவர்களால் சொல்ல இயலும். ஆனால் அந்த வியாதியை போக்குவதற்கான மருந்தினை மருத்துவம் பயின்ற மருத்துவர்களால் மட்டுமே சொல்ல இயலும். அது போலத்தான் இதுவும். ஜாதகத்தைப் பார்த்து புத்ர தோஷம் இருப்பதால் குழந்தை பிறப்பதில் பிரச்னை, களத்ர தோஷம் இருப்பதால் திருமணத்தில் பிரச்னை, ஆறாம் பாவகத்தில் இணையும் கிரகங்களால் உடல்நிலையில் பிரச்னை என்பதை மட்டுமே ஜோதிடர்களால் சொல்ல இயலும். அதற்கான பரிகாரம் என்ன என்பதை சாந்தி குஸூமாகரம், சாந்தி ரத்னாகரம் முதலான பல்வேறு நூல்களைக் கற்றறிந்த பெரியோர்கள்தான் சொல்ல வேண்டும். மேற்சொன்ன நூல்கள் ஜோதிட நூல்கள் அல்ல. இந்த நூல்கள் ஜோதிடத்தைப் பற்றியோ அல்லது கிரஹநிலை பற்றியோ பேசாது. குழந்தை பாக்கியம் இல்லை என்றால் அதற்கான தீர்வு என்ன, மாங்கல்ய தோஷம் இருந்தால் அதற்கான தீர்வு என்ன என்று பிரச்னைகளுக்கான பரிகாரத்தைப் பற்றி மட்டுமே பேசும். ஒரு சில ஜோதிடர்கள் ஜோதிடம் மற்றும் சாஸ்திரம் இரண்டையும் படித்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் சொல்லும் பரிகாரங்கள் முறையான தீர்வினைத் தரும். பரிகாரம் என்பது முழுக்க முழுக்க ஆன்மிகம் சார்ந்த விஷயம். அது அவரவர் மத நம்பிக்கைக்கு ஏற்றவாறு மாறுபடும். பரிகாரம் செய்வதில் இந்து, முஸ்லிம், கிறிஸ் துவர், சீக்கியர், பௌத்தர், சமணர் என்ற மாறுபாடு இருக்கும். ஆனால் ஜோதிடம் முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்த ஒன்று. ஜோதிடத்தைப் பொறுத்த வரை அவர் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் பலன் என்பது ஒன்றுதான். ஜாதகத்தில் புத்ரதோஷம் உள்ளது என்று சொன்னால் அவர் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் நிச்சயமாக குழந்தை பிறப்பில் பிரச்னை என்பதும் உண்டு. ஆனால், அதற்கான பரிகாரம் என்பது அவரவர் மதம், இனம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதையே நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஜோதிடம் என்ற சொல்லைக் கேட்டதும் பரிகாரம் என்ற வார்த்தை நம் நினைவிற்கு வரக்கூடாது. இந்த உண்மையைப் புரிந்துகொண்டால் ஜோதிடம் மீதான சந்தேகம் என்பது முற்றிலுமாக விலகிவிடும். எப்படி இருந்தாலும் அறிவியல் என்னும் விஞ்ஞானத்தையும் ஆன்மிகம் என்னும் மெய்ஞ்ஞானத்தையும் இணைக்கின்ற இணைப்புப் பாலம்தான் ஜோதிடம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.?அமாவாசை, பௌர்ணமி போன்றவை வெளிநாடு களில் நாள் மாறிடும்போது அங்குள்ள இந்துக்கள் எப்படி அனுஷ்டிக்க வேண்டும்? இந்திய நேரப்படியா?- அயன்புரம் த. சத்தியநாராயணன்.நிச்சயமாக இல்லை. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு பஞ்சாங்கம் என்பது உண்டு. இது அந்தந்த நாடு அமைந்திருக்கும் அட்சரேகை, தீர்க்கரேகையைப் பொறுத்து மாறுபடும். சூரிய உதய காலம் என்பது ஒவ்வொரு பகுதியிலும் மாறுபடும்போது அமாவாசை, பௌர்ணமியும் அந்த நாட்டின் அமைவிடத்திற்கு ஏற்றவாறு மாறுபடத்தான் செய்யும். தற்காலத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து. ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட எல்லா நாடுகளிலுமே பஞ்சாங்கத்தை கணித்து வைத்திருக்கிறார்கள். அமாவாசை, பௌர்ணமி மட்டுமல்ல, எல்லாவிதமான விரத நாட்களையும் சரி, பண்டிகைகளையும் சரி எந்த நாட்டில் வசிக்கிறோமோ அந்த நாட்டிற்குரிய கணக்கின்படியே கடைபிடிக்க வேண்டும். மாறாக இந்திய நேரத்தோடு ஒப்பிட்டு அதனைக் கணக்கிடுவது என்பது தவறு. உதாரணத்திற்கு மஹாளய அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று அமெரிக்காவில் உள்ளவர் நினைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்தியாவில் உள்ள அவரது சகோதரர் காலை பத்து மணிக்கு தர்ப்பணம் செய்கிறார் என்று வைத்துக்கொண்டால் அமெரிக்காவில் அது முதல்நாள் இரவு 11.30 மணி சுமார் என்று வரும். அந்த நேரத்திற்கு தர்ப்பணம் செய்ய இயலுமா அல்லது செய்வதுதான் சரியாகுமா? அந்த ஊரைப் பொறுத்த வரை மறுநாள் விடிந்தபின்னர்தானே செய்ய இயலும். அந்த ஊர் கணக்கின்படி அமாவாசை என்பது எந்த நேரத்தில் இருந்து எந்த நேரம் வரை உள்ளது என்பதை அந்த ஊரில் உள்ள பஞ்சாங்கத்தின் அடிப்படையில் தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறுதான் தர்ப்பணம் செய்ய வேண்டும். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இந்திய நேரப்படி அமாவாசை மற்றும் பௌர்ணமியை அனுஷ்டிக்க இயலாது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.?ஆகம விதிகளின்படி அமையாத பிளாட்பார கோயில், மரத்தடி சிலைகளை வணங்கலாமா?- மல்லிகா அன்பழகன், சென்னை-78.நிச்சயமாக வணங்கலாம். இறைவன் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான் எனும்போது அவனை வணங்குவதில் சந்தேகம் ஏன்? பிளாட்பாரமாக இருந்தாலும் சரி, மரத்தடியாக இருந்தாலும் சரிதான் எங்கு அமர வேண்டும் என்பதை இறைவனே தீர்மானம் செய்கிறான். மனித சக்தியின் முயற்சியால் மட்டும் அந்த இடத்தில் ஆலயம் என்பது அமைந்துவிடாது. எந்த இடத்தில் இறை சாந்நித்யம் என்பது உள்ளதோ, அங்குதான் அவனது சந்நதியும் அமையும். ஸ்தான பலம் என்று சொல்வார்கள்.ஸ்தான பலம் இருக்கும் இடத்தில் தானாகவே இறைவன் குடிகொள்கிறான். அவ்வாறு குடிகொண்டிருக்கும் இறை உருவங்களைத்தான் நாம் சுயம்பு மூர்த்தியாக வழிபட்டு வருகிறோம். இறைவனின் திருவுளம் எந்த இடத்தின் மீது அமைகிறதோ அங்குதான் ஆலயம் என்பதே உருவாகும். அதன்பின்பு அவனது ஆசியோடும் மனிதர்களின் சிரத்தையுடன் கூடிய பக்தியினாலும் ஆகமவிதிகள் முறையாக பின்பற்றப்பட்டு பூஜை என்பது அமைகிறது. ஆக எங்கும் நிறைந்திருக்கும் இறைவனின் சக்தியை இருப்பிடத்தைக் கொண்டு நிர்ணயிக்கக் கூடாது. பிளாட்பாரம் மற்றும் மரத்தடி கோயில்களிலும் இறைவனின் சக்தி நிச்சயமாக குடிகொண்டிருக்கும் என்பதில் ஐயம் ஏதும் தேவையில்லை.?மறைந்த மகான்களின் ஜீவசமாதியின் மேல் சிவலிங்கம் அமைத்து வழிபடுவதன் காரணம் என்ன?- ப.த.தங்கவேலு, பண்ருட்டி.மகான்களின் சமாதியின் மேல் சிவலிங்கம்தான் அமைந்திருக்கும் என்பதில்லை. இது அந்த மகான்கள் எந்த சித்தாந்தத்தைப் பின்பற்றியவர்களோ அதன் அடிப்படையில் அமைவதாகும். அத்வைத சித்தாந்தத்தைப் பின்பற்றிய மகான்களின் சமாதியின் மேல் மட்டும்தான் சிவலிங்கம் என்பது அமைந்திருக்கும். விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தைப் பின்பற்றி வந்த பெரியோர்களின் சமாதியின் மேல் வைணவச் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அதுபோல துவைத சித்தாந்தத்தைப் பின்பற்றி மத்வ ஆச்சாரியார்களின் சமாதி பிருந்தாவனம் என்ற பெயரில் துளசி மாடம் போல் அமைந்திருக்கும்.இதுபோன்ற சமயச் சின்னங்கள் அமைந்திருப்பதன் காரணம் யாதெனில் இறைவனின் தூதுவர்களாக இந்த உலகில் அவதரித்த அந்த மகான்கள் இறைவனோடு இரண்டறக் கலந்துவிட்டார்கள் என்பதை உணர்த்தவே ஆகும். அவர்கள் வேறு, இறைவன் வேறு என்று பிரித்துக் காணவேண்டிய அவசியம் இல்லை. ஜீவசமாதியாகிவிட்ட மகான்களின் சமாதியிலும் இறைசாந்நித்யம் என்பது நிறைந்திருக்கும் என்பதை உணர்த்தவே இவ்வாறு சமயச் சின்னங்கள் சமாதிகளின் மேல் அமைக்கப்படுகிறது.?மச்சம், கூர்மம் என்றெல்லாம் அவதாரம் எடுத்த பகவான் ஜாதி, மத, இன வேறுபாடுகளை ஒழிக்க கொரோனா கிருமியாக அவதாரம் எடுத்திருப்பதாகத் தெரிகிறதே… சரியா?- ஆர்.விநாயகராமன், திசையன்விளை.கொரோனாவை இறைவனின் அவதாரம் என்று கருதுவதைவிட இறைவனின் திருவிளையாடல் என்று எண்ணுவதே சரியாக இருக்கும். ஜாதி, மத இன வேறுபாடுகளை மறந்து ஏற்கெனவே எல்லோரும் ஒன்றிணைந்து செய்த விஷயம் இயற்கைக்கு எதிராக செயல்பட்டதே ஆகும். இயற்கைக்கு மாறான வாழ்வியல் முறை, உணவு பழக்கவழக்கம், முறையற்ற உறவுமுறை, தனிமனித ஒழுக்கமின்மை ஆகியவை மெல்ல மெல்ல நம்மையும் அறியாமல் நம்மோடு கலந்துவிட்ட காலத்தில் இந்த கொரோனா கிருமி தோன்றியுள்ளது. இதனால் உயிரிழப்புகள் என்பது அதிகமாக இருப்பதுபோல் தோன்றினாலும் மொத்தமாக கணக்கெடுப்பு செய்ததன் அடிப்படையில் கிடைத்த புள்ளிவிபரம் நம்மை ஆச்சரியத்திற்குள் கொண்டுசெல்கிறது. விபத்துக்கள், மற்ற நோய்கள், அறுவைசிகிச்சையில் தோல்வி ஆகியவற்றால் உண்டாகும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தற்போது பெருமளவில் குறைந்திருக்கிறது என்ற உண்மையை அந்த புள்ளிவிபரம் எடுத்துரைக்கிறது. அதோடு இயற்கையும் தன்னைத்தானே சீரமைத்துக் கொண்டு வருகிறது. ஆங்காங்கே ஏரிகள், குளங்கள் நிரம்பியிருக்கிறது. விவசாயத்தின்பால் மக்களின் கவனம் திரும்பத் துவங்கியிருக்கிறது. ஹோட்டல் சாப்பாட்டினை மட்டுமே தங்கள் உணவாகக் கொண்டிருந்த மக்களும் தற்போது வீட்டுச் சாப்பாட்டு முறைக்கு மாறியிருப்பது ஆரோக்யத்தினை மேம்படுத்துகிறது. இதுபோன்ற மாற்றங்களை கொரோனா கிருமி ஏற்படுத்தியிருப்பதால் கொரோனாவை இறைவனின் அவதாரம் என்று எண்ணுவதை விட அவனது திருவிளையாடல் என்று நினைப்பதே சரியாக இருக்கும்….

The post ஆன்மிகத்திற்கும் ஜோதிடத்திற்கும் சம்பந்தம் உண்டா? appeared first on Dinakaran.

Tags : Color Ganesan ,Boniummanmad ,
× RELATED திருக்குறுங்குடி அழகிய நம்பி ராயர் பெருமாள் ஆலயம்